ரோகித் சர்மாவுக்கு கேப்டன் பதவி வழங்கியது ஏன்? – சவுரவ் கங்குலி விளக்கம்
இந்திய கிரிக்கெட் அணியின் டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி சமீபத்தில் விலகியதால், இந்திய அணியின் டி20 போட்டி கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கும் ரோகித் சர்மாவை கேப்டனாக இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. ரோகித் சர்மா ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் கேப்டனாக தனது பணியை தொடர்வார்.
இதுதொடர்பாக, பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி கூறியதாவது:
விராட் கோலியிடம் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலக வேண்டாம் என இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டது. ஆனால் அவர் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். இதையடுத்து, இரண்டு வெள்ளை பந்து வடிவங்களுக்கு இரண்டு கேப்டன்களை வைத்திருப்பது சரியானதாக இருக்காது என அணி தேர்வர்கள் கருதினர். எனவே ஒருநாள் தொடரிலும் ரோகித்தை கேப்டனாக்க முடிவு செய்யப்பட்டது. ரோகித் சர்மாவின் தலைமைத் திறன்களில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.
மேலும், விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக நீடிப்பார். இந்திய கிரிக்கெட் சிறந்த வீரர்களின் கைகளில் உள்ளதாக நாங்கள் நம்புகிறோம். வெள்ளைப் பந்து வடிவத்தில் கேப்டனாக விராட் கோலியின் பங்களிப்புக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம் என் தெரிவித்தார்.