இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமனம்
இந்திய அணியின் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிக்கும் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வந்தார். சமீபத்தில் விராட் கோலி டி20 பதவியிலிருந்து விலகிய நிலையில், இந்திய அணியின் டி20 போட்டி கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் ரோகித் சர்மா இந்திய அணியின் புதிய ஒருநாள் போட்டி கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோகித் சர்மாவை புதிய கேப்டனாக நியமித்துள்ளது பிசிசிஐ. இதேபோல் டெஸ்ட் போட்டிக்கான அணியின் துணை கேப்டனாக ரோகித் நியமிக்கப்பட்டிருக்கிறார். கேப்டனாக விராட் கோலி நீடிக்கிறார்.
அத்துடன், தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் போட்டி அணியையும் பிசிசிஐ அறிவித்துள்ளது. காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான உள்ளூர் போட்டிகளில் கலந்துகொள்ளாத கே.எல்.ராகுல், காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பி உள்ளார். இதேபோல் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட ரிஷப் பண்ட், முகமது ஷமி, ஷர்துல் தாகூர், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரும் இந்த தொடரில் இணைந்துள்ளனர்.
ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகியோர் காயம் காரணமாக இந்த தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை. அஸ்வினுடன் சுழற்பந்துவீச்சாளர் ஜெயந்த் யாதவ் தனது நிலையை தக்கவைத்துள்ளார். விர்திமான் சகா விக்கெட் கீப்பராக செயல்படுகிறார். சமீபத்தில் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின்போது இந்தியா ஏ அணியில் சிறப்பாக விளையாடிய ஹனுமா விகாரிக்கும் இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டதன்மூலம், லிமிடெட் ஓவர் போட்டிகளில் விராட் கோலியின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது.
இந்திய டெஸ்ட் அணி: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, அஜிங்க்யா ரஹானே, ஷ்ரேயாஸ் அய்யர், ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட (விக்கெட் கீப்பர்), விருத்திமான் சகா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ்.
காத்திருப்பு வீரர்கள்: நவ்தீப் சைனி, சவுரப் குமார், தீபக் சாஹர், அர்சான் நக்வாஸ்வல்லா.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றன. முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்க உள்ளது.