கே..எல்.ராகும், ரஷீத்கான் ஆகியோருக்கு ஐபிஎல் போட்டியில் விளையாட தடை?
15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் புதிதாக லக்னோ, அகமதாபாத் ஆகிய 2 அணிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. இதனால் அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டியில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த போட்டிக்கான வீரர்களை தக்க வைத்துக் கொள்வதற்கான காலக்கெடு நவம்பர் 30 ஆம் தேதியோடு முடிந்தது. 8 அணிகளும் மொத்தம் 27 வீரர்களை தக்க வைத்து கொண்டுள்ளது. இதில் 4 பேர் சர்வதேச போட்டியில் விளையாடாத வீரர்கள் ஆவார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகியவை தலா 4 வீரர்களையும், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகியவை தலா 3 வீரர்களையும், பஞ்சாப் 2 வீரர்களையும் தக்க வைத்து உள்ளன.மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லோகேஷ் ராகுல் பஞ்சாப் அணியிலும், ரஷீத்கான் ஐதராபாத் அணியிலும் தக்க வைக்கப்படவில்லை.
தன்னை அணியில் இருந்து விடுவிக்கும்படியும், ஏலத்தில் பங்கேற்க விரும்புவதாகவும் ராகுல் கூறியதை தொடர்ந்து அவரை தக்க வைக்கவில்லை என்று பஞ்சாப் அணி நிர்வாகம் தெரிவித்தது. ரஷீத்கான் சில நிபந்தனைகளை முன் வைத்ததால் தக்கவைக்கவில்லை என்று ஐதராபாத் அணி நிர்வாகம் தெரிவித்தது.
இதற்கிடையே லோகேஷ் ராகுலையும், ரஷீத்கானையும் புதிய அணியான லக்னோ விதிகளை மீறி மூளை சலவை செய்து தங்கள் அணியிலிருந்து வெளியேற்றி விட்டதாக பஞ்சாப், ஐதராபாத் அணிகள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் வாய்மொழியாக புகார் கொடுத்தாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த ராகுலை ரூ.16 கோடிக்கு தக்கவைக்க பஞ்சாப் அணி திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால் அவருக்கு ரூ.20 கோடி வரை கொடுத்து ஒப்பந்தம் செய்ய லக்னோ அணி நிர்வாகம் பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதேபோல ரஷீத்கானை ரூ.9 கோடிக்கு தக்கவைக்க ஐதராபாத் அணி முடிவு செய்துள்ளதாகவும் அவருக்கு லக்னோ அணி ரூ.16 கோடி பேசியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீரர்கள் மீதும், லக்னோ அணி நிர்வாகம் மீதும் எழுத்துப் பூர்வமாக புகார் எதுவும் வரவில்லை என்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ராகுல், ரஷீத்கான் மீது விதிமீறல் இருந்து, அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஐ.பி.எல். போட்டியில் விளையாட ஒரு ஆண்டு தடை விதிக்கப்படும்.
கடந்த காலங்களில் இதே மாதிரியான குற்றச்சாட்டில் ரவீந்திர ஜடேஜாவுக்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.