ரூ.20 கோடிக்கு கே.எல்.ராகுலை வாங்க விரும்பு புதிய ஐபில் அணி
15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இதில் புதிய அணிகளாக அகமதாபாத், லக்னோ அணிகள் பங்கேற்கின்றன.
லக்னோ அணியை ஆர்.பி.எஸ்.ஜி. குழுமம் ரூ.7,090 கோடிக்கும், அகமதாபாத் அணியை சி.வி.சி. கேபிட்டல் ரூ.5,600 கோடிக்கும் ஏலம் எடுத்தன.
ஐ.பி.எல். ஏலத்துக்கு முன்பு ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என்றும், மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கான காலக்கெடு இன்று முடிவடைகிறது.
புதிய அணிகள் 2 இந்திய வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரர், ஒரு புதுமுக வீரர் ஆகியோரை எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே 8 அணிகளில் 7 அணிகள் 18 வீரர்களை தக்க வைத்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனி, ஜடேஜா, ருதுராஜ் கெய்ட்வாட், மொய்ன் அலி ஆகியோரும், கொல்கத்தா அணியில் சுனில் நரேன், ஆந்த்ரே ரசல், வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் அய்யர் ஆகியோரும், மும்பை அணியில் ரோகித்சர்மா, பும்ரா ஆகியோரும், ஐதராபாத் அணியில் வில்லியம்சனும் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.
பெங்களூர் அணியில் விராட் கோலி, மேகஸ்வெல், டெல்லி அணியில் ரிஷப் பண்ட், பிரித்வி ஷா, அக்ஷர் படேல், ஆன்ரிச் நோர்க்கியா, ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் ஆகியோர் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.
பஞ்சாப் அணியில் எந்த ஒரு வீரரும் தக்க வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த லோகேஷ் ராகுலை புதிய அணியான லக்னோ வாங்க ஆர்வமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவருக்கு ரூ.20 கோடி வரை கொடுக்க அந்த அணி முயன்று வருகிறது.
2018 ஐ.பி.எல். ஏலத்தில் ராகுலை ரூ.11 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்தது. கடந்த 4 சீசனில் முறையே அவர் 659, 593, 670, 626 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.