ஆன்மீகம், அரசியல் இரண்டிலும் ரஜினிக்கு துணையாக நிற்பேன் – லதா ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்துள்ளார். அவர் எப்போது அரசியல் களத்தில் குதித்து, புதிய கட்சியை தொடங்குவார் என்று அவரது ரசிகர்கள் வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறார்கள். இந்தநிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து அவரது மனைவி லதா ரஜினிகாந்திடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- உங்களது கணவர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:- அவர் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கும்.
கேள்வி:- சினிமா வாழ்க்கையில் ரஜினிகாந்துக்கு உறுதுணையாக இருக்கும் நீங்கள், அரசியலிலும் உறுதுணையாக இருப்பீர்களா?
பதில்:- அவர் ஆன்மிக பாதை, அரசியல் பாதை என்று என்ன முடிவு எடுத்தாலும் நான் உறுதுணையாகவும், பக்கபலமாகவும் இருப்பேன்.
கேள்வி:- ரஜினிகாந்த் நடித்த படங்களிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்தமான படம் எது?
பதில்:- அப்படி குறிப்பிட்டு சொல்ல முடியாது. பெரிய பட்டியலே இருக்கிறது.
கேள்வி:- ரஜினிகாந்த் தான் நடிக்கும் திரைப்படங்களின் கதை குறித்து உங்களிடம் விவாதிப்பாரா?
பதில்:- பொதுவாகவே எல்லா விஷயங்களிலும் நாங்கள் கலந்து ஆலோசிப்போம்.
கேள்வி:- திரை உலகில் ரஜினிகாந்துக்கு பொருத்தமான ஜோடி யார் என்று நினைக்கிறீர்கள்?
பதில்:- ஒருத்தர் என்று உண்மையாகவே சொல்லிவிட முடியாது. எல்லோரும் எனக்கு நண்பர்கள். எல்லோரும் எங்களுக்கு வேண்டியவர்கள். எல்லோரையும் நான் மதிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.