Tamilவிளையாட்டு

கடந்த 2 வருடங்களாக சதம் அடிக்கவில்லை! – சச்சி சாதனையை கோலியால் முறியடிக்க முடியுமா?

இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படுபவர் சச்சின் தெண்டுல்கர். இவர் டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்களும், ஒருநாள் போட்டியில் 18,426 ரன்களும், ஒரேயொரு டி20 போட்டியில் விளையாடி 10 ரன்களும் அடித்துள்ளார்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும், டெஸ்ட் போட்டியில் 51 சதங்கள், ஒருநாள் போட்டியில் 49 சதங்கள் என 100 சதங்கள் விளாசியுள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் இந்த சாதனையை முறியடிக்க முடியுமா? என்றால், அது சந்தேகமே…

ஆனால், தற்போதைய இந்திய அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி, தனது அபாரமான ஆட்டத்தால் சதமாக குவித்து வந்தார். இதனால் சச்சின் தெண்டுல்கர் சாதனையை விராட் கோலியால் முறியடிக்க முடியும் என நம்பப்பட்டது.

விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 43 சதங்கள், டெஸ்ட் போட்டியில் 27 சதங்கள் என 70 சதங்கள் அடித்துள்ளார். 70-வது சதத்தை கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அடித்தார். அப்போது விராட் கோலிக்கு 31 வயது. சூப்பர் டூப்பர் ஃபார்மில் இருந்தார்.

இன்னும் ஐந்து வருடங்கள் விளையாடினால் எப்படியும் எளிதாக 100 சதங்கள் அடிப்பார் என்ற நிலையில்தான் விராட் கோலி ஆட்டத்தில் சறுக்கல் ஏற்பட்டது. இதனால், 2019-ல் இருந்து தற்போது வரை அவரால் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் போனது.

தற்போது 33 வயதை கடந்துள்ளார். இதனால் விராட் கோலியால் 100 சதங்களை எட்ட முடியுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தற்போது டி20 கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியை துறந்துள்ள விராட் கோலி, ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக வாய்ப்புள்ளது. அதன்பின் பேட்டிங்கில் தீவர கவனம் செலுத்தினால் 100 சதங்களை எட்ட வாய்ப்புள்ளது.