Tamilசினிமா

ஜெய் பீம் விவகாரம் – நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் மீது வழக்கு

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜெய் பீம்’. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தனர். விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனால், இப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமான காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறி அது தொடர்பான அறிக்கையை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக ‘ஜெய் பீம்’ படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரூ.5 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும் கோரி வன்னியர் சங்கம் சார்பில் வழக்கறிஞர் மூலம் சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதுதொடர்பாக இயக்குனர் ஞானவேல், ஜெய்பீம் திரைப்படத்திற்கு எழுந்த சில எதிர்மறை கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை. ஜெய்பீம் திரைப்பட ஆக்கத்தில் தனிப்பட்ட நபரையோ, குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை. மனவருத்தம் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் உளப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஜெய்பீம் திரைப்பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவதூறு பரப்பியது, இரு சமூகத்தினர் இடையே வன்முறை தூண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளில், வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.