டோனி இந்திய அணியின் மிகப்பெரிய சொத்து – கபில் தேவ்
இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. ஒருநாள் மற்றும் டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்த டோனிக்கு தற்போது இந்திய டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் டோனியின் டி20 கிரிக்கெட் வாழ்க்கை முடிவிற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முதன்முறையாக இந்தியாவிற்கு உலகக்கோப்பையை வாங்கிக் கொடுத்த கபில் தேவ், 20 வயதில் டோனியிடம் எதிர்பார்த்ததை தற்போதும் எதிர்பார்க்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கபில் தேவ் கூறுகையில் “டோனி மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர். அவரது அனுபவம் அணிக்கு உதவும் என்றால், டோனியின் வேலை சரியானது. ஆனால், ஒவ்வொருவரும் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, டோனிக்கு தற்போது வயது 20 இல்லை.
மீண்டும் அவரால் 20 வயதிற்கு செல்ல முடியாது. ஆக, அவரால் அணிக்கு எவ்வளவு ஸ்கோரை சேர்க்க முடியுமோ, அதை செய்வார். அவர் அணிக்கு மிகப்பெரிய சொத்து. அவரது உடற்தகுதி மட்டுமே முக்கியமானது. டோனி மேலும் அதிக போட்டிகளில் விளையாட வாழ்த்துகிறேன்.
டோனி எந்த வேலை செய்திருந்தாலும் அதை சிறப்பாக செய்துள்ளார். ஆனால், அவர் 20 வயதில் செய்ததை தற்போதும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறானது. 20 வயதில் செய்ததை தற்போது செய்ய இயலாது.”என்றார்.