புனித் ராஜ்குமார் நடத்திய அனாதை இல்ல குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றுக்கொண்ட நடிகர் விஷால்
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் சமீபத்தில் மாரடைப்பால் காலமானார். இவருக்கு புகழஞ்சலி கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் விஷால் கலந்து கொண்டு பேசியதாவது:-
நடிகர் புனித் ராஜ்குமாரின் இறப்பு செய்தியை என்னால் ஏற்கவே முடியவில்லை. அவர் மிக திறமையான நடிகர். புனித் ராஜ்குமார் இறந்த பிறகு 2 நாட்கள் எனக்கு தூக்கம் வராமல் கஷ்டப்பட்டேன். எனக்கு சொந்த வீடு இல்லை. வீடு வாங்க வேண்டும் என்று சிறிது பணத்தை சேமித்து வைத்துள்ளேன். வீடு பின்பு கூட வாங்கிக்கொள்ள முடியும். புனித் ராஜ்குமார் நடத்திய சக்திதாமா அனாதை இல்ல குழந்தைகளின் கல்வி செலவை நான் ஏற்கிறேன்.
இதற்கு அவரது குடும்பத்தினர் அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்கிறேன். புனித் விட்டு சென்ற நல்ல பணிகளை நாம் தொடர வேண்டும். அதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். அனைவருக்கும் இதயம் உள்ளது. ஆனால் நல்ல பணிகளை ஆற்ற வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருப்பது இல்லை. அவர் சமூக சேவைகளை வெளியில் தெரியாமல் செய்துள்ளார். நான் விளம்பரத்திற்காக இந்த கல்வி செலவை ஏற்பதாக கூறவில்லை. உள்ளபடியே அவரது இந்த நல்ல சேவையை தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதை செய்கிறேன்.
இவ்வாறு விஷால் பேசினார்.