Tamilசெய்திகள்

தொலைக்காட்சி விவாதங்களை கடுமையாக விமர்சித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

டெல்லியை மிரட்டும் காற்று மாசு தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆதித்ய துபே, சட்டக்கல்லூரி மாணவர் அமன் பங்கா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அவர்கள் தங்கள் வழக்கு மனுவில், சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் உள்ள விவசாய கழிவுகளை அகற்றுவதற்கு இலவசமாக எந்திரங்களை வழங்குவதற்கு உத்தரவிடும்படி கூறியிருந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து, பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாதங்கள் மற்றவற்றை விட அதிக மாசை உருவாக்குகின்றன. என்ன நடக்கிறது, என்ன பிரச்சினை என்று பேசுபவர்களுக்குப் புரியவில்லை. ஒவ்வொருவருக்கும் அவர்களின் சொந்த விருப்பு வெறுப்புகள் இருக்கின்றன. இதுபோன்ற விவாதங்களில் அவை வெளிப்படுகின்றன.

இவ்வாறு அவர்கள்  கூறினர்.

டெல்லி அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார். அதில், விவசாய நிலங்களில் உள்ள கழிவுகளை எரிப்பது காற்று மாசுபாட்டிற்கான காரணங்களில் ஒன்று என கூறப்பட்டிருந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக நீதிபதிகள் இந்த கருத்தை தெரிவித்தனர்.