Tamilசெய்திகள்

திருநங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் மீது வழக்குப் பதிவு

கோவை அம்மன் குளத்தை சேர்ந்த 30 வயது திருநங்கை, ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது

ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில்  கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை வி‌ஷயமாக சென்ற போது எனது செல்போன் திருட்டு போனது.

இது குறித்து நான் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்திருந்தேன். இது தொடர்பாக விசாரணை நடத்த கடந்த 6-ந் தேதி ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக  பணியாற்றும் மூவேந்திரன் வேல்பாரி (வயது 50) என்பவர் எனது வீட்டிற்கு வந்தார்.

அவர், விசாரணை என்ற பெயரில் வீட்டிற்குள் புகுந்து ஆபாசமாக பேசி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த நான் சத்தம் போட்டேன். உடனே அவர் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். எனவே என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போலீஸ்காரர் மூவேந்திரன் வேல்பாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அதன் பேரில் போலீஸ் ஏட்டு மூவேந்திரன் வேல்பாரி மீது ஆபாசமாக பேசுதல், தவறாக நடத்தல், திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம்- 2019 ஆகிய பிரிவுகளின் கீழ்  ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.