தமிழகத்தின் 29 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை முதல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறி உள்ளது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை வடதமிழக கடலோரப் பகுதிகளை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இன்றும், நாளையும் வடதமிழகத்தில் மிக மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதன் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து நேற்று உத்தரவிட்டது.
இதேபோல், கனமழை எதிரொலியால் தமிழகத்தின் மேலும் 20 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மதுரை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, கரூர், தேனி, விழுப்புரம், விருதுநகர், திண்டுக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, வேலூர், புதுக்கோட்டை, நாமக்கல், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருச்சி, திருவண்ணாமலை, திருப்பூர், ராமநாதபுரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.