Tamilவிளையாட்டு

டி20 உலக கோப்பை கிரிக்கெட் – பப்புவா நியூ கினியாவை வீழ்த்தியது வங்கதேசம்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் முதல் சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ‘பி’ பிரிவில் இன்று மாலை நடைபெற்ற ஆட்டத்தில் வங்காளதேசம்-பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய வங்காளதேச அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் மஹ்முதுல்லா 50 ரன்கள் சேர்த்தார். ஷாகிப் அல் ஹசன் 46 ரன்கள், லித்தன் தாஸ் 29 ரன்கள் சேர்த்தனர்.

இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணி, துவக்கம் முதலே வங்காளதேச பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். 29 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகள் வீழ்ந்தன.

இந்த நெருக்கடியான சூழ்நிலையில், கிப்லின் டோரிகா ஆறுதல் அளிக்கும் வகையில் விளையாடி அரை சதத்தை நெருங்கினார். எனினும் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் பப்புவா நியூ கினியா அணி 97 ரன்களில் சுருண்டது.  கிப்லின் டோரிகா 34 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 46 ரன்கள் சேர்த்தார்.

வங்காளதேசம் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷாகிப் அல் ஹசன் 4 விக்கெட் வீழ்த்தினார்.