மது குடித்துவிட்டு வருபவர்களுக்கு தண்டனையளிக்கும் கிராமம்
குஜராத்தில் மோதிபுரா என்ற கிராமத்தில் யாரும் மது குடிக்க கூடாது என்று சமீபத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அதையும் மீறி மது குடித்து விட்டு ஊருக்குள் வந்தால் அவர்களை இரும்பு கூண்டுக்குள் அடைத்து வைக்கும் புதிய திட்டத்தை அந்த கிராமத்து பஞ்சாயத்து தலைவர் பாபுநாயக் அறிவித்தார்.
மது குடிப்பவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் இந்த திட்டத்தை நிறைவேற்ற இரும்பு கூண்டுகள் தயாரிக்கப்பட்டன. சமீபத்தில் அந்த கிராமத்துக்குள் மது குடித்துவிட்டு வந்த இளைஞர்கள் இரும்பு கூண்டுக்குள் அடைக்கப்பட்டனர்.
அபராத தொகையை செலுத்திய பிறகே அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் செலுத்திய அபராத தொகை அந்த கிராமத்தின் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மோதிபுரா கிராமத்தில் அமல்படுத்தப்பட்ட இந்த திட்டத்துக்கு அருகில் உள்ள கிராம மக்கள் வரவேற்பு தெரிவித்தனர். இதையடுத்து மேலும் 23 கிராமங்களில் மது பிரியர்களை இரும்பு கூண்டுக்குள் அடைக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
அகமதாபாத், சுரேந்திர நகர், அம்ரேலி, கட்ச் ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. இந்த தண்டனை மூலம் மது குடிப்பவர்களின் எண்ணிக்கையை கணிசமாக கட்டுப்படுத்த முடியும் என்று கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.