ஆந்திர மாநிலத்தில் சினிமா தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அரசு அனுமதி
கொரோனா தொற்று அதிகரித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோவில்கள், தியேட்டர்கள், மால்கள் உட்பட பல்வேறு விஷயங்களுக்கு தடை விதிக்கப்பட்டன. தற்போது தொற்று பாதிப்புகள் குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே கொரோனா காரணமாக 50 சதவிகித இருக்கைகளுடன் மட்டுமே தியேட்டர்களை திறக்க தமிழ்நாடு, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்கள் அறிவித்திருந்தன. அதன்படி தியேட்டர்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவதன் ஒரு பகுதியாக ஆந்திர மாநில அரசு புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. இதன்படி அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு, 100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்குவதற்கு அனுமதி வழங்கி உள்ளது.
முன்னதாக தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர்கள், மாநில அரசை 100 சதவிகித பார்வையாளர்களை அனுமதிக்குமாறு வலியுறுத்தி வந்தனர். மேலும் தெலங்கானா மாநிலத்தில் ஜூன் மாதம் முதல் 100 சதவிகித இருக்கைகளுடன் தியேட்டர்கள் செயல்பட்டு வருவதால், ஆந்திராவில் அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டன. தியேட்டர்கள் இன்று முதல் நூறு சதவிகித இருக்கைகளுடன் செயல்பட ஆந்திர மாநில அரசு அனுமதி அளித்ததற்கு அம்மாநில தியேட்டர் உரிமையாளர்களும், திரைப்படத் தயாரிப்பாளர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.