போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் கைது!
மும்பையில் இருந்து கோவாவிற்கு சொகுசு கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. இக்கப்பலில் போதை பாரட்டி நடப்பதாகப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மும்பை மண்டல இயக்குனர் சமீர் தலைமையில் அதிகாரிகள் அந்த சொகுசு கப்பலில் சாதாரண பயணிகள் போன்று டிக்கெட் எடுத்து பயணம் செய்தனர்.
கப்பல் மும்பையில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் பார்ட்டி ஆரம்பமானது. பார்ட்டியில் கஞ்சா, கோகைன் போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்ததை அடுத்து அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள், போதைப்பொருள் வைத்திருந்தவர்கள் என மொத்தம் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆரியன் கான் உள்பட 13 பேரை பிடித்தனர். பிடிபட்ட அனைவரிடமும் 20 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை முடிவில், ஷாருக்கான் மகன் ஆரியன் கானை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஆரியன் கான் உள்பட 3 பேரை மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர். இந்த விவகாரம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.