இந்தியாவில் 69 சதவீதம் முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போடப்படும் நிலவரம், கொரோனா பாதிப்பு விகிதம் உள்ளிட்டவை குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-
* 18 வயதான 69 சதவீதத்தினருக்கு ஒரு ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரு ‘டோஸ்’ தடுப்பூசிகளும் 25 சதவீதத்தினருக்கு போடப்பட்டுள்ளது.
* கிராமப்புறங்களில் உள்ள தடுப்பூசி மையங்களில் 64.1 சதவீதமும், நகர்ப்புற மையங்களில் 35 சதவீதமும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
* கிராமப்புறம், நகர்ப்புறம் என பிரிக்கப்படாத தடுப்பூசி மையங்களில் 67.4 லட்சம் தடுப்பூசிகள் (0.88 சதவீதம்) போடப்பட்டுள்ளது.
* கடந்த வாரம் நாட்டில் கொரோனா பாதிப்புக்குள்ளானோரில் 59.66 சதவீதம் பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இங்கு 1 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெறுகின்றனர்.
* கொரோனா மாதிரிகள் பரிசோதனை குறைக்கப்படவில்லை. சராசரியாக ஒவ்வொரு நாளும் 15 அல்லது 16 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன.
* 18 மாவட்டங்களில் கொரோனா வாராந்திர பாதிப்பு விகிதம் 5 முதல் 10 சதவீத அளவில் உள்ளது. 30 மாவட்டங்களில் வாராந்திர பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கிறது.
* ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின், ஜைகோவ்-டி தடுப்பூசியை பொறுத்தமட்டில் 3 ‘டோஸ்’ செலுத்திக்கொள்ள வேண்டும். இது ஊசியின்றி செலுத்தப்படும். இதன் விலை குறித்து, தயாரிப்பு நிறுவனத்தினடம் பேச்சு நடத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.