ராகுல் காந்தியையும், பிரியங்காவையும் வதறாக வழிநடத்துகிறார்கள் – அமரிந்தர் சிங் பேட்டி
பஞ்சாப் மாநில ஆளும் காங்கிரசில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக, அமரிந்தர் சிங், முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகினார். மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவின் ஆதரவாளர் சரண்ஜித்சிங் சன்னி, புதிய முதல்-மந்திரி ஆனார்.
இந்தநிலையில், அமரிந்தர் சிங் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
ராகுல் காந்தியும், பிரியங்காவும் என் பிள்ளைகளை போன்றவர்கள். அவர்கள் அனுபவம் இல்லாதவர்கள். ஆலோசகர்கள் அவர்களை தவறாக வழிநடத்துகிறார்கள். இந்த பிரச்சினை இப்படி முடிந்திருக்கக்கூடாது. நான் பெரிதும் வேதனை அடைந்துள்ளேன். வருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரசை மீண்டும் வெற்றிபெற வைத்துவிட்டு, வேறு யாரையாவது முதல்-மந்திரி ஆக்க வழிவிடுவதாக சோனியாகாந்தியிடம் தெரிவித்தேன். ஆனால் அது எடுபடவில்லை. சித்து, முதல்-மந்திரி பதவிக்கு உயர்த்தப்படுவதை கடைசிவரை எதிர்த்து போராடுவேன். இத்தகைய ஆபத்தான மனிதரிடம் இருந்து நாட்டை காப்பாற்ற எந்த தியாகமும் செய்ய தயாராக இருக்கிறேன்.
சட்டசபை தேர்தலில் அவரை தோற்கடிக்கும் அளவுக்கு வலிமையான வேட்பாளரை நிறுத்துவேன். எனவே, அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி நண்பர்களுடன் ஆலோசித்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.