இந்தியில் ரீமேக் ஆகும் ‘96’
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ’96’. ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற இப்படம், திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது. ராம் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும், ஜானு என்ற கதாபாத்திரத்தில் திரிஷாவும் நடித்திருந்தார்கள்.
இப்படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை கவர்ந்தது. பள்ளி பருவ காதல், நட்பு என அழகாக திரைக்கதை அமைத்திருந்தார்கள். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இசை படத்திற்கு பெரும் பலமாக அமைந்தது. தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட்டான இப்படத்தை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்தனர்.
இந்நிலையில், 96 படம் அடுத்ததாக இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதனை தனது சமூக வலைதள பதிவு வாயிலாக உறுதிப்படுத்தி உள்ள நடிகர் விஜய் சேதுபதி, இப்படத்தின் இந்தி ரீமேக்கை அஜய் கபூர் தயாரிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார். இப்படத்தை இயக்க உள்ள இயக்குனர் மற்றும் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தயாரிப்பாளர் அஜய் கபூர் தெரிவித்துள்ளார்.