மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிடும் பிரியங்கா வேட்பு மனு தாக்கல் செய்தார்
மேற்கு வங்காள மாநிலம் பவானிபூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். மம்தாவை எதிர்த்து, பாஜக சார்பில் வழக்கறிஞர் பிரியங்கா திப்ரேவால் களமிறக்கப்பட்டுள்ளார். மம்தா பானர்ஜிக்கு இந்த தேர்தலில் கடும் சவால் அளிக்கும் வகையில், பாஜக சார்பில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் அடங்கிய தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பவானிபூர் தொகுதியின் பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி உடனிருந்தார்.
பின்னர் பேசிய பிரியங்கா, இது அநீதிக்கு எதிரான போராட்டம் என்றும், மேற்கு வங்காள மக்களுக்கான நீதிக்கான போராட்டம் என்றும் குறிப்பிட்டார். பவானிபூர் மக்கள் வரலாறு படைப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பவானிபூர் தொகுதியில் வரும் 30ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அக்டோபர் 3ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.