பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆகஸ்டு 24-ந் தேதி முதல் செப்டம்பர் 5-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றனர்.
வேறு எந்த பாராலிம்பிக்கிலும் இல்லாத வகையில் ஜப்பானில் நடந்த பாராலிம்பிக்கில் இந்தியர்களின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்தது. அதிக பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்தனர்.
இந்தியாவுக்கு 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என ஆக மொத்தம் 19 பதக்கங்கள் கிடைத்தது. அவனி லெகரா, மனிஷ் நார்வல் (துப்பாக்கி சூடுதல்), பிரமோத் பகத், கிருஷ்ணா நாகர் (பேட் மிண்டன்), சிமாஅன்டில் (ஈட்டிஏறிதல்) ஆகியோர் தங்கப் பதக்கம் வென்று முத்திரை பதித்தனர்.
தமிழக வீரர் மாரியப்பன், பிரவீன்குமார், நிஷாத்குமார் (உயரம் தாண்டுதல்), பவினா படேல் (டேபிள்டென்னிஸ்), சுகாஸ் யதிராஜ் (பேட் மிண்டன்), யோகேஷ் கதுனியா (வட்டு எறிதல்), தேவேந்திர ஜஜகாரியா (ஈட்டி ஏறிதல்), சிங்ராஜ் அதானா (துப்பாக்கி சுடுதல்) ஆகியோர் வெள்ளிப்பதக்கமும், சுந்தர் சிங் குர்ஜர் (ஈட்டி எறிதல்), சிங்ராஜ் அதானா, அவனிலெகரா (துப்பாக்கி சுடுதல்), சரத்குமார் (உயரம் தாண்டுதல்), ஹர்விந்தர் சிங் (வில்வித்தை), மனோஜ் சர்க்கார் (பேட்மிண்டன்) ஆகியோர் வெண்கல பதக்கம் பெற்றனர்.
இந்த நிலையில் பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்கள் இன்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பதக்கம் வென்றவர்களுக்கும், போட்டியில் பங்கேற்றவர்களுக்கும் அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
அவர்களும் குருப் போட்டோவும் எடுத்து கொண்டனர். ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து அவர்களது திறமையை பற்றி பிரதமர் கேட்டறிந்தார்.