Tamilசினிமா

கவுதம் மேனன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்!

கவுதம் மேனன் இயக்கத்தில் அண்மையில் வெளியான ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ என்கிற குறும்படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து சிம்பு நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை இயக்கி வருகிறார் கவுதம் மேனன். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘வெந்து தணிந்தது காடு’ படத்துக்கு பின் இயக்குனர் கவுதம் மேனன் இயக்க உள்ள புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த கூட்டணி உறுதியானால் அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றும் முதல் படமாக இது அமையும்.

தற்போது டான் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக அட்லியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அசோக் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை முடிந்த பின்னர், அவர் கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.