Tamilசெய்திகள்

கொரோனா 3 வது அலையை சமாளிக்க அரசு தயாராக உள்ளது – அமைச்சர் அனுராக் தாகூர்

மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாகூர், தனது சொந்த மாநிலமான இமாசலபிரதேசத்தில் 5 நாள் ‘ஜன ஆசீர்வாத் யாத்திரை’யை நேற்று சிம்லாவில் தொடங்கினார்.

இந்த யாத்திரையின்போது அவர் 4 மக்களவை தொகுதி, 37 சட்டசபை தொகுதி என 623 கி.மீ. தொலைவை கடந்து செல்கிறார்.

யாத்திரையின் தொடக்கத்தையொட்டி அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கொரோனா 3-வது அலையை சமாளிப்பதற்கு முழுமையாக தயார் நிலையில் உள்ளது. இதற்காக ரூ.23 ஆயிரத்து 123 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த அலையானது குழந்தைகளை அதிகளவில் தாக்கலாம் என்று வல்லுனர்கள் அஞ்சுவதால், குழந்தைகள் பராமரிப்பை பலப்படுத்துவதற்கு சிறப்பான முக்கியத்துவம் தரப்படுகிறது. கொரோனா இலவச தடுப்பூசிக்கு மத்திய அரசு ரூ.35 ஆயிரம் கோடியை ஒதுக்கி உள்ளது.

கொரோனா 2-வது அலை தாக்கியபோது, ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படும் என யாரும் அறிந்திருக்கவில்லை. இப்போது ஏராளமான ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளன.

இமாசல பிரதேசத்தில் சுகாதாரத்துறை திட்டங்களுக்காக ரூ.4,200 கோடி செலவிடப்படும். இன்னும் 10 ஆண்டுகளில் இந்த மாநிலத்தின் கலையும், கலாச்சாரமும் உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் ஊக்குவிக்கப்படும்.

மாநில அரசியலில் ஈடுபடும் திட்டம் இருக்கிறதா என்று கேட்கிறீர்கள். தற்போது எனக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்பில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மத்திய மந்திரியாக இந்த மாநிலத்துக்கு நான் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.