Tamilசெய்திகள்

தமிழக சட்டசபை நாளை கூடுகிறது

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை பொதுத்தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் 7-ந்தேதி பதவி ஏற்றார்.

அதன் பிறகு ஜூன் 21-ந்தேதி சட்டசபையின் முதல் கூட்டம் நடைபெற்றது. அன்றைய கூட்டத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் எம்.எல்.ஏ.க்கள் பேசினார்கள். இந்த கூட்டம் 3 நாட்கள் நடைபெற்றது. இறுதி நாள் அன்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக பதில் அளித்து பேசினார்.

அதன்பிறகு தலைமை செயலகத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டார். அனைத்து துறைகளின் ஆய்வுக்கூட்டம் முடிந்த நிலையில் கடந்த 4-ந் தேதி அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் 13-ந்தேதி (நாளை) சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்வது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி சட்டசபை 13-ந் தேதி காலை 10 மணிக்கு கூடுவதாக சட்டசபை செயலாளர் சீனிவாசன் அறிவிப்பு வெளியிட்டார்.

அதன்படி தமிழக சட்டசபை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நாளை மறுநாள் (14-ந்தேதி) வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

நாளை பட்ஜெட் உரையுடன் தொடங்கும் சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 21-ந் தேதி வரை மொத்தம் 29 நாட்கள் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

இந்த பட்ஜெட் காகிதமில்லா இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவித்தார். இதற்காக எம்.எல்.ஏ.க்களின் இருக்கை முன்பு கம்ப்யூட்டர் வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கையடக்க டேப் (செல்போன்) வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் இதில் என்னென்ன அறிவிப்புகள் இடம்பெறும். வரிவிதிப்பு இருக்குமா? சலுகைகள் ஏதும் அறிவிக்கப்படுமா? ஏன்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சட்டசபை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை கிளப்ப உள்ளது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளில் இன்னும் என்னென்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை பட்டியலிட்டு பேச உள்ளனர்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய நிலையில் அதுகுறித்தும் சட்டசபையில் அனல்பறக்கும் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு சட்ட மசோதாக்களும் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.