தயாநிதி மாறனுக்கும், அண்ணாமலைக்கும் இடையே நடக்கும் சமூக வலைதல மோதல்!
தமிழக அரசியல் களம் 2026 ஆம் ஆண்டு தி.மு.க – அ.தி.மு.க என்ற நிலையிலிருந்து தி.மு.க – பா.ஜ.க என்ற நிலைக்கு மாறும் என பாரதிய ஜனதாவினர் தொடர்ந்து சொல்லி வருகின்றனர்.
அந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற நோக்குடனேயே முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலையை பாஜக, தமிழக மாநிலப் பிரிவின் தலைவராக நியமித்துள்ளது. பாஜகவின் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து பம்பரமாக சுற்றி வருகிறார் அண்ணாமலை. தி.மு.க.வை டார்கெட் செய்தும் அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார்.
கர்நாடகத்துக்கும் தமிழகத்துக்கும் சமீப காலத்தில் பெரும் சச்சரவாக மாறியுள்ளது மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணைக் கட்டும் விவகாரம். இந்த விவகாரத்தில் பாஜக, கர்நாடக மாநிலத்தில் ஒரு நிலைப்பாடும் தமிழகத்தில் ஒரு நிலைப்பாடும் எடுத்துள்ளது. கர்நாடக அரசு, ‘அணைக் கட்டியே தீருவோம்’ என்கிறது. ஆனால் தமிழக பா.ஜ.க.வோ, ‘தலைகீழாக நின்று மூக்கால் தண்ணீர் குடித்தாலும் முடியாது’ என்கிறது. கர்நாட மாநில பா.ஜ.க அரசை எதிர்த்துப் போராட உள்ளதாகவும் தமிழக பா.ஜ.க அறிவித்துள்ளது.
இதைச் சுட்டிக்காட்டித்தான் தி.மு.க எம்.பி., தயாநிதி மாறன் சில நாட்களுக்கு முன்னர், ‘தமிழ்நாடு பாஜக போராடினாலும் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என கர்நாடக முதலமைச்சர் கூறிய நிலையில் மாவீரன் அண்ணாமலையை தூதுவராக அனுப்புவோம்’ என்று கிண்டல் செய்தார்.
இதற்கு அண்ணாமலை கொடுத்த பதிலடிதான் தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியது, ‘கொரோனா நோய்தொற்று பாதிப்பில் மக்கள் துன்புற்று இருந்தபோது டி20 விளையாட்டுப் போட்டியை ரசித்துக் கொண்டு இருந்த தயாநிதி மாறன் அவர்கள்… மேகதாது அணை பற்றி கவலைப்பட்டமைக்கு மிக்க நன்றி. தங்கள் சிறப்பு விமானத்தை அனுப்பி வைத்தால் நம் மாநில ஏழை விவசாயிகளை அழைத்துக்கொண்டு தூது செல்ல நான் தயார். இதை அவர் மாமா திரு.மு.க.ஸ்டாலின் அனுமதிப்பாரா?’ என்று தயாநிதி மாறனுக்கு பதில் கேள்வி கேட்டார்.
இதற்கு தி.மு.க தரப்பிலிருந்தும் தயாநிதி மாறன் தரப்பிலிருந்தும் இதுவரை பதில் வரவில்லை. இந்நிலையில் மீண்டும் அண்ணாமலை, ‘தயாநிதி மாறனுக்கு வாய்க்கட்டுப்பாடு வேண்டும். எங்களுடைய அரசியல் வேறு மாதிரி இருக்கும்’ என்று எச்சரித்துள்ளார்.
இப்படி தொடர்ந்து இந்த விவகாரத்தைக் கையிலெடுப்பது பற்றி பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியை மாலை மலர் இணையதளத்திற்காக தொடர்பு கொண்டோம். அவர் கூறியதாவது, “மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு அனுமதி இல்லாமல் அணை கட்டுவதற்கு அனுமதி கொடுக்க முடியாது என்பதை மத்திய அரசு தரப்பும், உச்ச நீதிமன்றமும் பலமுறை தெளிவுபடுத்திவிட்டன. ஆனால் தி.மு.க தேவையில்லாமல் இதில் பிரச்சனை செய்து வருகிறது.
இதில் தயாநிதி மாறன், அரசியல் பண்பில்லாமல் கேலி செய்யும் விதத்தில் அண்ணாமலையை விமர்சித்தார். எனவே அவரும் தயாநிதி மாறனுக்கு ஏற்ற வகையில் பதில் கொடுத்தார். மற்றப்படி இந்த விவகாரத்தை தி.மு.க vs பா.ஜ.க என்று நாங்கள் அணுகவில்லை. அவர்களின் கருத்துக்கு எதிர் கருத்து வைத்தோம். அவ்வளவே’ என்றார் உறுதிபட.