Tamilவிளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி – பாகிஸ்தான் வெற்றி

பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 3-0 என பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 232 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரிஸ்வான், பாபர் அசாம் அரை சதமடித்து அசத்தினர். ரிஸ்வான் 63 ரன்களும், பாபர் அசாம் 85 ரன்களும் எடுத்தனர். பகர் சமான் 8 பந்தில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 26 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஹபீஸ் 10 பந்தில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி என 24 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தது.

அந்த அணியின் லிவிங்ஸ்டோன் தன்னந்தனி ஆளாக போராடினார். 17 பந்தில் அரை சதமடித்த அவர் 43 பந்தில் 9 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 103 ரன்கள் குவித்து அவுட்டானார். ஜேசன் ராய் 32 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், இங்கிலாந்து அணி 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 31 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருது ஷஹீன் அப்ரிதிக்கு அளிக்கப்பட்டது. இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.