Tamilசெய்திகள்

பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் 25-ந்தேதி முதல் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.

கொரோனா நோய் தொற்று பரவல் குறையத் தொடங்கிய நிலையில் தமிழக அரசு ஒவ்வொரு வாரமும் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 7-ந்தேதி ஆட்சி அமைந்த போது 25 ஆயிரத்துக்கும் அதிகமாக கொரோனா பரவல் இருந்தது. அதன் பிறகு ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் காரணமாக 2 மாதத்தில் கொரோனா பரவுவது வேகமாக குறைந்துள்ளது. தற்போது 2 ஆயிரத்து 400 பேர்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையும் குறைக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 19-ந் தேதி காலை 6 மணிக்கு நிறைவடைய உள்ளது. மாநிலம் முழுவதும் தியேட்டர்கள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம் மற்றும் அரசியல் சார்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், பள்ளி, கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தவிர மாநிலங்களுக்கு இடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து (புதுச்சேரி நீங்கலாக) இன்னும் தொடங்கப்படவில்லை. திருமண நிகழ்வுகளில் 50 பேர், இறுதி சடங்குகளில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

இதேபோல் கடைகள் இரவு 9 மணிவரை செயல்படுவதற்கு அனுமதி உள்ளது. இந்த கட்டுப்பாடுகளில் என்னென்ன கூடுதல் தளர்வுகளை அறிவிக்கலாம்? என்பது குறித்து ஆலோசிக்க முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வருவாய் துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தாலும் 3-வது அலை ஏற்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த காலகட்டத்தில் மேற்கொள்ள வேண்டி இருப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கோவை, சேலம், தஞ்சாவூர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் நோய் தொற்று எண்ணிக்கை அண்மையில் உயர்ந்துள்ளதால் அதை கட்டுப்படுத்த கூடுதல் முன்னேற்பாடுகள் செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மக்கள் கூடும் இடங்களில் கடும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க கண்காணிப்பை பலப்படுத்துவது போன்ற அம்சங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கொரோனா குறைந்து வரும் சூழலில் கூடுதல் தளர்வுகளை எந்தெந்த வகையில் செயல்படுத்தலாம்? என்பது பற்றியும் அதிகாரிகளிடம் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டு அறிந்தார்.

பள்ளி- கல்லூரிகளை திறந்தால் ஏற்படும் சாதக- பாதகங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளை முதல் கட்டமாக திறக்கலாமா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதேபோல் கடைகள் திறந்து இருக்கும் நேரம் இரவு 9 மணிவரை என்பதை இரவு 10 மணிவரை நீட்டிக்கலாமா? என்பது பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது.

சினிமா தியேட்டர்களை திறக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வந்துள்ளதால், அது குறித்தும் இந்த கூட்டத்தில் பேசப்பட்டது.

கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் கூறுகையில், ‘‘மக்கள் நலன் கருதி ஒரு சில தளர்வுகளை கூடுதலாக அறிவிக்கலாம்’’ என்று கருத்து தெரிவித்தனர். இதன் அடிப்படையில் கூடுதல் தளர்வுகள் என்ன என்பது இன்று அல்லது நாளை தெரியவரும்.

இதுகுறித்து கூட்டத்தில் பங்கேற்ற உயர் அதிகாரி கூறுகையில், ‘‘கொரோனா நோய் தொற்று மீண்டும் வேகமாக பரவி விடக்கூடாது என்பதில் அரசு கண்ணும் கருத்துமாக உள்ளது. அதன் அடிப்படையில் ஊரடங்கில் கூடுதலாக சில தளர்வுகள் மட்டும் அறிவிக்கப்படக்கூடும். என்னென்ன தளர்வுகள் என்பதை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார்’’ என்றார்.