நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்?
மத்திய அரசு நடத்தும் நீட் தேர்வு மூலமே மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது.
அதன் அடிப்படையில் 2018-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் நீட் தேர்வு மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
நீட் தேர்வு காரணமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டனர். அவர்களால் மற்ற மாணவர்களோடு போட்டி போட்டு நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத நிலை உருவானது.
எனவே நீட் தேர்வுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று தி.மு.க. கூறி இருந்தது. அதன்படி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.
தி.மு.க. அரசு பதவி ஏற்றதைத் தொடர்ந்து கடந்த மாதம் 10-ந்தேதி நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட ஆய்வு குழு ஒன்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்தார்.
இந்த ஆய்வுக்குழு தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் எந்த அளவுக்கு உள்ளது? மாணவர்கள் இந்த தேர்வால் எந்த விளைவுகளை சந்திக்கிறார்கள்? உள்ளிட்டவை பற்றி ஆய்வுகளை மேற்கொண்டது.
இதன் அறிக்கையை நேற்று நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்தது. அந்த அறிக்கை 165 பக்கங்கள் கொண்டதாக இருக்கிறது.
இந்தக் குழு தமிழகம் முழுவதும் 86 ஆயிரத்து 342 பேரிடம் கருத்துக்கள் கேட்டு அதன் அடிப்படையில் அறிக்கையை ஆய்வு குழு தயாரித்தது. கருத்து கேட்கப்பட்டவர்களில் சுமார் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நீட் தேர்வு வேண்டாம் என்று கூறியுள்ளனர்.
ஏ.கே.ராஜன் குழு நீட் தேர்வினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி முழுமையாக விளக்கி இருப்பதுடன் தேர்வை ரத்து செய்வதற்கு 3 விதமான பரிந்துரைகளை அரசுக்கு வழங்கி உள்ளது.
1. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து விலக்கு பெறுவது.
2. ஒருவேளை நுழைவு தேர்வை நடத்தியே மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு சொன்னால் அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் தனியாக நுழைவு தேர்வை நடத்தி அந்த மார்க்கையும், பிளஸ்-2 மார்க்கையும் சேர்த்து அதன் அடிப்படையில் மாணவர்களை சேர்க்க வேண்டும்.
3. அதற்கும் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி கொடுக்காவிட்டால் சட்டசபையை கூட்டி நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அந்த தீர்மானத்துக்கு ஜனாதிபதியிடம் இருந்து ஒப்புதல் பெற வேண்டும்.
இந்த பரிந்துரைகள் அதில் கூறப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் அறிக்கையை ஆய்வு செய்து வருகிறார். அதன் பரிந்துரை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வார்.
தேவைப்பட்டால் சட்டசபையில் அனைத்துக்கட்சி ஒத்துழைப்புடன் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
நீதிபதி ஏ.கே.ராஜன் குழு பரிந்துரைத்துள்ள 3 அம்சங்கள் அடிப்படையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு போதிய அவகாசம் தற்போது இல்லை. நீட் தேர்வு செப்டம்பர் 12-ந்தேதி நடத்தப்படும் என்று மத்திய கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதற்குள் விலக்கு நடவடிக்கைகள் எடுப்பது கடினம் என்பதால் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். அரசு சார்பிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
எனவே இந்த ஆண்டு விலக்கு பெறுவதற்கான சாத்தியம் குறைவாக இருக்கிறது. இதனால் அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு விலக்கு அமலுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.