Tamilவிளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் – பெடரர், ஆஷ்லி பார்ட்டி 3 வது சுற்றுக்கு முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.

இதில் நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதனை படைத்தவருமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 7-6, 6-1, 6-4 என்ற நேர் செட்களில் பிரான்சின் காஸ்குட்டை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

6-ம் நிலை வீரர் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 7-5, 6-2, 6-3 என்ற நேர் செட்டில் டெனிஸ் சான்ட்கிரீனை (அமெரிக்கா) சாய்த்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

பெரேட்டினி (இத்தாலி), மெட்வடேவ் (ரஷியா), பாடிஸ்டா அகுட் (ஸ்பெயின்), கிறிஸ்டியன் காரின் (சிலி) ஆகியோரும் இரண்டாவது சுற்றில் வெற்றி கண்டனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் புயல் ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) 6-4, 6-3 என்ற நேர் செட்டில் பிளின்கோவாவை (ரஷியா) விரட்டி 3-வது சுற்றை எட்டினார்.

சமீபத்தில் பிரெஞ்ச் ஓபனை வென்றவரான பார்போரா கிரெஜ்சிகோவா (செக் குடியரசு) தன்னை எதிர்த்த ஜெர்மனியின் ஆன்ட்ரியா பெட்கோவிச்சை 7-5, 6-4 என்ற நேர் செட்டில் தோற்கடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். அவர் தொடர்ச்சியாக சுவைத்த 14-வது வெற்றி இதுவாகும்.

இதேபோல், கரோலினா முச்சோவா (செக் குடியரசு), பாலா படோசா (ஸ்பெயின்), செவஸ்தோவா (லாத்வியா), பாவ்லிசென்கோவா (ரஷியா) உள்ளிட்டோரும் தங்களது 2-வது தடையை வெற்றிகரமாக கடந்தனர்.