Tamilசெய்திகள்

போக்குவரத்து கழகத்தின் வருவாய் இழப்பு அதிகரிப்பு! – அதிகாரி தகவல்

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் 3,200 பஸ்கள் இயக்கப்பட்டன. சுமார் 35 லட்சம் பேர் பயணம் செய்தனர்.

கொரோனா பாதிப்புக்கு பின்னர் பஸ் போக்குவரத்து குறைந்தது. பொதுமக்கள் குறைந்த அளவிலேயே பயணம் செய்கிறார்கள்.

கடந்த வாரம் முதல் சென்னையில் மாநகர பஸ் சேவை தொடங்கியது. 6 லட்சம் பேர் பயணம் செய்தனர். 1,500, 2000 என்ற அளவில் பஸ்கள் இயக்கப்பட்டன. நேற்று முதல் கூடுதல் தளர்வு அறிவிக்கப்பட்டதால் பஸ் சேவையும் அதிகரிக்கப்பட்டன. நேற்று 2,210 பஸ்கள் இயக்கப்பட்டது. அதில் 11 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

இதுகுறித்து மாநகர போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு இன்னும் வரவில்லை. பயணிகள் குறைந்த அளவில் பயணம் செய்கிறார்கள். 2-வது அலைக்கு முன்னதாக வரை 20 லட்சம் பேர் பயணம் செய்தனர். ஆனால் தற்போது சராசரியாக 11 லட்சம் பயணிகள் பயணிக்கிறார்கள்.

பெண்கள் மாநகர பஸ்களில் கட்டணமின்றி பயணம் செய்ய அனுமதி உள்ளதால் தற்போது அதிக அளவு பயணம் செய்கிறார்கள். மொத்தம் உள்ள பஸ்களில் 50 சதவீதம் பெண்கள் இலவச பயணத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

தற்போது 585 வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனாலும் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லை. ஒரு சில வழித்தடங்களில் மட்டும் கூட்டம் அதிகமாக உள்ளது. டீசல் விலை உயர்வு, பயணிகள் குறைவு காரணமாக போக்குவரத்து கழகத்துக்கு வருவாய் இழப்பு அதிகரித்துள்ளது.