Tamilசெய்திகள்

‘சிங்கார சென்னை 2.0’ திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 25 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகர மேயராக பொறுப்பு வகித்தார்.

அப்போது சென்னை மாநகரை அழகுபடுத்தும் நோக்கத்தில் சிங்கார சென்னை திட்டம் கொண்டு வரப்பட்டது. ஜவகர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ‘சிங்கார சென்னை’ திட்டத்துக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தி.மு.க. ஆட்சியில் இருந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையில் இந்த பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. இதன் பின்னர் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் சிங்கார சென்னை திட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தின் முதல்- அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல்வேறு மக்கள் நலப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். தி.மு.க. ஆட்சி அமைந்து ஒரு மாதம் நிறைவு பெற்றுள்ள நிலையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

அந்த வகையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கனவு திட்டமான சிங்கார சென்னை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதன்படி அந்த திட்டம் ‘சிங்கார சென்னை 2.0’ வாக புதுப்பொலிவு பெற உள்ளது. இந்த திட்டத்தின்படி சென்னையை சர்வதேச தரத்துக்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சென்னை மாநகரில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப் சிங் பேடி, அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடத்தி உள்ளார். சிங்கார சென்னை திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகளை மேற்கொள்வதற்காக தேவைப்படும் செலவினங்கள் பற்றியும், நிதி ஆதாரங்கள் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரை அழகாக மாற்றும் வகையில் பல்வேறு வித்தியாசமான அம்சங்களுடன் சிங்கார சென்னை திட்டம்-2 தயாராகி உள்ளது. கலை, கலாச்சாரத்தை மேம்படுத்தும் வகையில் கல்வி, விளையாட்டு, சுகாதாரத்தை பேணும் வகையிலும் இந்த திட்டத்தில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற உள்ளன. ‘பிராஜக்ட் புளூ’ என்ற பெயரில் சென்னையில் கடற்கரை பகுதிகளில் பல்வேறு இடங்களை தேர்வு செய்து அழகுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நீருக்கு அடியில் மீன் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. நீர் விளையாட்டுகளை கொண்டு வருவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

திருவொற்றியூர், உத்தண்டி உள்பட 6 கடற்கரை பகுதிகளை தேர்வு செய்து அங்கு பல்வேறு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 21.6 கி.மீ. கடற்கரை பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. ‘பயோராக் டெக்னாலஜி’ முறையில் இந்த கடற்கரை பகுதிகள் வித்தியாசமான முறையில் மேம்படுத்தப்பட உள்ளன.

சிங்கார சென்னை சீரமைப்பு திட்டத்தின் கீழ் அண்ணாநகர் டவர் பூங்காவும் புதுப்பொலிவு பெற உள்ளது. அங்கு மறு சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளன. பூங்காவை மேலும் அழகுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் தேவைப்படும் இடங்களில் கூடுதலாக மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் உருவாக்கவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

அறிவியல், என்ஜினீயரிங் மற்றும் கணித பூங்காக்களும் ஏற்படுத்தப்பட உள்ளன. செல்லப் பிராணிகளுக்கான பூங்காவும் உருவாக்கப்பட உள்ளது. அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் மாணவர்களின் உயர் கல்வியை மேம்படுத்தும் வகையில் ‘ஸ்மார்ட் வசதிகள்’ மேற்கொள்ளப்பட உள்ளன.

எழும்பூர், கிண்டி ரெயில் நிலையங்களிலும் சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளன.

சிங்கார சென்னை திட்டம் தொடர்பாக பொதுமக்களுடன் விரைவில் ஆலோசனை நடத்தவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.