சாதனையை சமன் செய்ய காத்திருக்கும் செரீனா வில்லியம்ஸ்
அமெரிக்காவின் தலைசிறந்த டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். இவர் கடந்த 1999-ம் ஆண்டு முதன்முதலாக கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை வென்றார். தொடர்ந்து டென்னிஸில் ஜாம்பவானாக திகழ்ந்த இவர், இதுவரை 23 கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். கடைசியாக 2017-ம் ஆண்டு ஆஸ்திரேலியா ஓபனை கர்ப்பிணியாக இருந்தபோதே வென்றார்.
குழந்தை பெற்ற பிறகு சிறிது காலம் விளையாடவில்லை. அவர் தற்போது வரை 23 கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். இன்னும் ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்றுவிட்டால், கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை அதிகமுறை வென்ற மார்கரெட் கோர்ட் (24) சாதனையை சமன் செய்துவிடுவார்.
தற்போது நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபனில் எப்படியும் சாதித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் களம் இறங்கினார். முதல் மூன்று சுற்றுகளில் வெற்றி பெற்ற செரீனா வில்லியம்ஸ், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 21 வயதேயான இளம் வீராங்கனை ரிபாகினாவிடம் 6-3, 7-5 எனத் தோல்வியடைந்து வெளியேறினார்.
பிரெஞ்ச் போனால் என்ன? விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். 23 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள செரீனா களிமண் தரையில் நடைபெறும் பிரெஞ்ச் ஓபனை மூன்று முறை மட்டுமே கைப்பற்றியுள்ளார்.