அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு!
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலாஹாரிஸ் அரசுமுறை பயணமாக குவாத் மாலாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.
இதற்காக நேற்று மதியம் ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டார்.அவர் சென்ற விமானத்தில் திடீர் என்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதை சரி செய்ய விமானி முயற்சி செய்தார். என்றாலும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. எனவே கமலா ஹாரிஸ் சென்ற விமானம் மீண்டும் அதே விமான நிலையத்துக்கு திரும்பியது. அங்கேயே தரை இறக்கப்பட்டது.
பின்னர் அவர் வேறு ஒரு விமானத்தில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து வேறு விமானத்தில் தனது பயணத்தை கமலா ஹாரிஸ் தொடர்ந்தார்.
அதில் அவர், திட்டமிட்டபடி குவாத் மாலாவுக்கு சென்றடைந்தார். அமெரிக்க துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவி ஏற்ற பிறகு அரசு முறை பயணமாக அவர் செல்லும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில் நுட்ப கோளாறு காரணமாக ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்துக்கு விமானம் திரும்பியபோது, கமலா ஹாரிஸ் தனது கட்டை விரலை உயர்த்தி காட்டியபடி கீழே இறங்கினார் என்று பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.
விமானத்தில் கோளாறு என்று தெரிவித்த பிறகும் கமலா ஹாரிஸ் எந்தவித பதட்டமும் அடையவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கொரோனா தாக்குதல் ஏற்பட்ட பிறகு, குவாத்மாலா, மெக்சிகோ ஆகிய இடங்களுக்கு சென்று, அங்குள்ள மக்களுக்கு விழிப்புணர்வு, நம்பிக்கை ஆகியவற்றை ஏற்படுத்த திட்டமிட்டு இருந்தார். இங்கு வாழ்வோர் பெரும்பாலும் புலம் பெயர்ந்தவர்கள்.
இங்கு ஆவணம் இல்லாமல் இருப்போருக்கு குடியேறுவற்கு தேவையான மூல காரணங்களை ஆய்வு செய்வதும் இவரது பயணத்தின் மற்றொரு நோக்கமாகும். இது புதிய அமெரிக்க அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றாகும்.