Tamilசெய்திகள்

தடுப்பூசிகள் பகிர்ந்தளிப்பதற்காக எந்த ஆதாயத்தையும் பெறப்போவதில்லை – அமெரிக்கா அறிவிப்பு

உலக சுகாதார அமைப்பின் தடுப்பூசி பகிர்ந்தளிக்கும் திட்டமான ‘கோவேக்ஸ்’ திட்டத்தின்படி, 2.5 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வெளிநாடுகளுக்கு நன்கொடையாக வழங்கப்படும் என அமெரிக்க அரசு அறிவித்து உள்ளது. அவற்றில் கொரோனா பாதிப்புகள் அதிகமுள்ள கனடா, மெக்சிகோ மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு 60 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.

இந்நிலையில் இந்த தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் பிற நாடுகளில் இருந்து ஆதாயங்களை பெறுவதற்கு அமெரிக்கா இதனை பயன்படுத்தாது என அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது அவர் கூறியதாவது:-

உலகம் தற்போது சந்தித்து வரும் கொரோனா பேரிடரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே நமது நோக்கமாகும். தடுப்பூசிகளை செலுத்துவதன் மூலம் பல உயிர்களை காப்பாற்ற முடியும். உலக நாடுகளுடன் தடுப்பூசிகளை பகிர்ந்து அளிக்கும் நிலையில் தற்போது அமெரிக்க உள்ளது. எனவே தேவைப்படும் நாடுகளுக்கு முதற்கட்டமாக 2.5 கோடி தடுப்பூசிகள் பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது.

அதே நேரம் அதிபர் ஜோ பைடன் கூறியது போல், அமெரிக்க அரசு தடுப்பூசிகளை பகிர்ந்து அளிக்கும் நாடுகளிடம் எந்த ஆதாயத்தையும் பயன்படுத்திக் கொள்ளப்போவது இல்லை. பல்வேறு நாடுகளில் இருந்து தடுப்பூசிக்கான கோரிக்கை வந்துள்ளது. அமெரிக்காவின் அண்டை நாடுகளான பெரு, ஈகுவடார், கொலம்பியா உள்ளிட்ட நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

அதே நேரம் அதிக பாதிப்புகளை சந்தித்து வரும் தெற்காசிய நாடுகளான இந்தியா, நேபாளம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகள் பகிர்ந்து அளிக்கப்படும். மேலும் காசா, மேற்கு கரை, உக்ரைன், ஈராக், ஹைதி உள்ளிட்ட நாடுகளில் குறைந்த அளவு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அத்தகைய நாடுகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் வழங்க முடிவு செய்துள்ளோம்.

இந்த 2.5 கோடி தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் கொரோனா பேரிடரை முழுவதுமாக முடிவுக்கு கொண்டு வர முடியாது. அதிபர் ஜோ பைடன் 8 கோடி தடுப்பூசிகளை பகிர்ந்தளிக்க முடிவு செய்துள்ளார். நம்மிடம் மிகையாக உள்ள தடுப்பூசிகளை நாம் பகிர்ந்து அளிப்போம். அமெரிக்காவின் நட்பு நாடுகள் மற்றும் ஜி-7 உறுப்பு நாடுகளின் உதவியோடு கொரோனா பேரிடரை முடிவுக்கு கொண்டு வர முயன்று வருகிறோம். அடுத்த வாரம் இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஜி-7 மாநாட்டில் இது குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்படும்.