தெலுங்கு படங்கள் இயக்குவதில் ஆர்வம் காட்டும் தமிழ் சினிமா இயக்குநர்கள்!
தென்னிந்திய திரையுலகில் தமிழ் படங்களுக்கு இணையாக தெலுங்கு படங்களுக்கும் நல்ல மார்க்கெட் உள்ளது. நடிகர், நடிகைகள், இயக்குனர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கிறார்கள். இதனால், பிரபல தமிழ் இயக்குனர்களின் பார்வை தெலுங்கு படங்கள் பக்கம் திரும்பி உள்ளது.
இயக்குனர் ஷங்கர் முன்னணி தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2-ம் பாகத்தை முடிக்காமல், தெலுங்கு படத்தை அவர் இயக்க கூடாது என்று கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்து படப்பிடிப்பை தொடங்கும் முடிவில் இருக்கிறார் ஷங்கர்.
அதேபோல் இயக்குனர் லிங்குசாமியும் தெலுங்கு படமொன்றை இயக்கி வருகிறார். இதில் ராம்போதினேனி கதாநாயகனாக நடிக்கிறார். அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாசும் தெலுங்கு படம் இயக்க தயாராகிறார். அவர் இயக்கும் தெலுங்கு படத்தில் கதாநாயாகனாக ராம் போதினேனி நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இயக்குனர் முருகதாஸ் ஏற்கனவே மகேஷ்பாபு நடித்த ஸ்பைடர் எனும் தெலுங்கு படத்தை இயக்கி உள்ளார். இவர்கள் தவிர மேலும் சில இயக்குனர்களும் தெலுங்கு படங்கள் இயக்க பேச்சுவார்த்தையில் உள்ளனர்.