தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்தது
தமிழகத்தில் கடந்த 10-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
முதலில் 7 நாட்கள் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு நேற்று முதல் கூடுதலாக ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து இருக்கிறது. தமிழகத்தில் மேற்கு மற்றும் மத்திய மாவட்டங்களிலும், சென்னையிலும் நோயின் தாக்கம் பெருமளவு குறைந்து இருக்கிறது.
கோவை, ஈரோடு மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்கள் அனைத்திலும் நோய் தொற்று சரிந்துள்ளது.
கடந்த மாதம் 13-ந்தேதி தமிழகம் முழுவதும் 14 லட்சத்து 99 ஆயிரத்து 485 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் 1 லட்சத்து 83 ஆயிரத்து 772 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வந்தனர். இந்த எண்ணிக்கை அடுத்தடுத்த நாட்களில் மேலும் அதிகரித்தது.
கடந்த மாதம் 15-ந்தேதி அன்று சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது.
கொரோனா தொற்றால் கடந்த மாதம் 12-ந்தேதியில் இருந்து தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது. கடந்த 19-ந்தேதி அன்று 2 லட்சத்து 53 ஆயிரத்து 576 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அந்த எண்ணிக்கை 24-ந்தேதி அன்று 3 லட்சத்தை கடந்தது.
அடுத்தடுத்த நாட்களிலும் நோயின் தாக்கம் அதிகரித்து இருந்ததால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே சென்றது. இதன் படி கடந்த 27-ந்தேதி அன்று தமிழகத்தில் 3 லட்சத்து 13 ஆயிரத்து 48 பேர் சிகிச்சை பெற்றனர்.
இதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.
கடந்த மாதம் 31-ந்தேதி அன்று 3 லட்சத்து 1,781 பேர் சிகிச்சை பெற்றனர். இது நேற்று மேலும் குறைந்து இருக்கிறது. தமிழக அரசு நேற்று வெளியிட்ட கொரோனா பாதிப்பு புள்ளிவிவரத்தின் படி தமிழகத்தில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் கீழ் சென்றுள்ளது.
தற்போது 2 லட்சத்து 96 ஆயிரத்து 131 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையில் 32 ஆயிரத்து 69 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மாநிலம் முழுவதும் இதுவரை (கடந்த 14 மாதங்களில்) கொரோனாவால் 21 லட்சத்து 23 ஆயிரத்து 29 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களில் 18 லட்சத்து 2 ஆயிரத்து 176 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
சென்னையில் 5 லட்சத்து 6 ஆயிரத்து 933 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் 4 லட்சத்து 67 ஆயிரத்து 723 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இதன் மூலம் சென்னையில் 32 ஆயிரத்து 69 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். உயிரிழப்புகளை பொறுத்த வரை தமிழகம் முழுவதும் 24,722 பேர் பலியாகி இருக்கிறார்கள். சென்னையில் மட்டும் 7,145 பேர் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்து உள்ளனர்.