Tamilசினிமா

அஜித்தின் வீரம் இந்தியில் ரீமேக் ஆகிறது

சிவா – அஜித் கூட்டணி முதன்முறையாக இணைந்து பணியாற்றிய படம் வீரம். கடந்த 2014-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழை தொடர்ந்து, தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்க கட்டமராயுடு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வரவேற்பை பெற்றது.

இதையடுத்து இந்தியிலும் வீரம் படத்தை ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்தன. இந்தி ரீமேக்கில் அஜித் கதாபாத்திரத்தில் அக்‌ஷய்குமார் நடிப்பதாக இருந்தது. பின்னர் அவர் விலகியதால், தற்போது அவருக்கு பதிலாக சல்மான்கான் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்த படத்துக்கு ‘பை ஈத் கபி தீவாளி’ என பெயரிட்டுள்ளனர். கொரோனா பரவல் குறைந்த பின் படப்பிடிப்பை முழு வீச்சில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர். இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டே தேர்வாகி உள்ளார். தெலுங்கு நடிகையான பூஜா ஹெக்டே தமிழில் முகமூடி படத்தில் நடித்துள்ளார். தற்போது ‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

ஏற்கனவே விஜய்யின் மாஸ்டர் படம் இந்தியில் ரீமேக் செய்யப்படும் நிலையில், தற்போது அஜித்தின் வீரம் படமும் அங்கு ரீமேக் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.