இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் – முதல் நாளில் வங்காளதேசம் 302 ரன்கள் சேர்ப்பு
இலங்கை – வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலங்கை பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தெர்வு செய்தது.
அதன்படி வங்காளதேசம் அணியின் தமிம் இக்பால், சாய்ஃப் ஹசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சாய்ஃப் ஹசன் ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்து நஜ்மல் ஹொசைன் ஷான்டோ களம் இறங்கினர்.
இவர் தமிம் இக்பால் உடன் இணைந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் அரைசதம் அடித்தனர். தமிம் இக்பால் 90 ரன்களில் ஆட்டம் இழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 144 ரன்கள் குவித்தது.
அடுத்து கேப்டன் மொமினுல் ஹக் களம் இறங்கினார். நஜ்மல் ஹொசைன் ஷான்டோ சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். மொமினுல் ஹக் அரைசதம் அடித்தார்.
இந்த ஜோடி முதல்நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. இதனால் வங்காளதேசம் முதல்நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்துள்ளது. நஜ்மல் 126 ரன்களுடனும், மொமினுல் ஹக் 64 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.