கேப்டன் பதவிக்கு ரிஷப் பண்ட் தகுதியானவர் – ஸ்ரேயாஷ் அய்யர்
ஐ.பி.எல்.போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருப்பவர் ஸ்ரேயாஷ் அய்யர். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது அவருக்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
இதன் காரணமாக ஸ்ரேயாஷ் அய்யரால் ஐ.பி.எல். போட்டியில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணிக்கு யார் கேப்டனாக தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விக்கெட் கீப்பரான இளம் வீரர் ரிஷப் பண்ட் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்டீவ் சுமித், அஸ்வின், ரகானே போன்ற மூத்த வீரர்கள் இருக்கும் போது டெல்லி அணி நிர்வாகம் ரிஷப் பண்ட் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு கேப்டன் பொறுப்பை வழங்கி உள்ளது.
இந்தநிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் பதவிக்கு ரிஷப் பண்ட் தகுதியானவர் என்று ஸ்ரேயாஷ் அய்யர் கருத்து தெரிவித்துள்ளார்.
ரிஷப்பண்ட் சிறந்த மனிதர். இதில் எந்த சந்தேகமும் இல்லை. காயம் காரணமாக என்னால் ஐ.பி.எல். போட்டியில் ஆட முடியவில்லை. இதனால் டெல்லி அணிக்கு கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் ரிஷப்பண்ட் சிறந்தவர். கேப்டன் பதவிக்கு தகுதியானவர். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
இவ்வாறு ஸ்ரேயாஷ் அய்யர் கூறி உள்ளார்.
ஸ்ரேயாஷ் தலைமையில் டெல்லி அணி கடந்த ஐ.பி.எல். போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரிஷப்பண்டுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரரும் சி.எஸ்.கே. அணியை சேர்ந்தவருமான சுரேஷ் ரெய்னா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த சீசனுக்கு டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரிஷப்பண்டுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள். அவர் சிறந்த தலைவராக உருவாகுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தனது சிறப்பான பணி மூலம் டெல்லி அணியை அவர் பெருமைப்படுத்துவார்.
இவ்வாறு சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.