தமிழகத்தில் தற்போது ஊரடங்கு இல்லை – சுகாதாரத்துறை செயலாளர்
தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்படாது என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 1,700-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 2-வது அலை ஏற்படுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் தேர்தலுக்கு பின்னர் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் 2-வது அலை இல்லை என்றும், ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்றும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் தொற்று அதிகரித்து வருகிறது உண்மைதான். ஆனால் 2-வது அலை உருவாகவில்லை. தமிழகத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் 6 ஆயிரத்து 900-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 1,700-க்கும் மேற்பட்டவர்களுக்கே தொற்று உறுதி செய்யப்படுகிறது. இது 2-வது அலை இல்லை. பொதுமக்கள் முககவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக கடைப்பிடித்தால் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும்.
தமிழகத்தில் ஒரே தெருவில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அந்த தெரு ‘மைக்ரோ’ கட்டுப்பாட்டு பகுதியாக மாற்றப்படும். கடந்த ஆண்டு போல் தெருவை அடைக்காமல், தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வீட்டில் கிருமிநாசினி தெளித்து, அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவர். அவர்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் வழங்க உள்ளாட்சி அமைப்பு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் தற்போதுஊரடங்கு அமல்படுத்தப்படும் என வதந்தி பரவி வருகிறது. அதிகாரபூர்வமான அறிவிப்பு வரும் வரை இதுபோன்ற வதந்திகளை பொதுமக்கள் நம்பக்கூடாது. தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்படாது. பொதுமக்கள் தொடர்ந்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கினால் கொரோனா தொற்றை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.