பிரிட்டன் பிரதமர் சமர்ப்பித்த செயல்திட்ட அறிக்கைக்கு மந்திரிசபை ஒப்புதல்
ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட பிரிட்டன் தனிநாடாகவே பார்க்கப்படுகிறது.
ஆனால், ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள 27 நாடுகளுடனான நிதி கொடுக்கல் – வாங்கல், எதிர்கால பரிவர்த்தனை, விசா மற்றும் குடியுரிமை தொடர்பாக இருதரப்பினரும் செய்துகொள்ள வேண்டிய எதிர்கால உடன்படிக்கையை பிரிட்டன் பிரதமர் தெரசா மே தயாரித்து வந்தார்.
இந்த செயல்திட்ட வரைவு அறிக்கையை ஆளும் கன்சர்வேட்டின் கட்சியை சேர்ந்த முதன்மை மந்திரிகளும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கடுமையாக எதிர்த்து வந்தனர். இதுதொடர்பாக தனிப்பட்ட முறையிலும் பாராளுமன்றத்திலும் சூடான விவாதங்கள் நடந்து வந்தது.
இதற்கிடையில், சுமார் 500 பக்கங்களை கொண்ட ஒரு செயல்திட்ட அறிக்கையை ஐரோப்பிய யூனியன் தயாரித்துள்ளது. பிரிட்டனில் உள்ள ஐரோப்பிய நாடுகளின் தூதர்கள் இதுதொடர்பாக விவாதிக்க வரும் 25-ம் தேதி அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது தொடர்பான காலக்கெடுவான 29-3-2019 என்ற தேதி நெருங்கி வருவதால் தெரசா மே தயாரித்த செயல்திட்டத்தின் மீது அதிருப்தி அடைந்த சில மந்திரிகளும் சொந்தக் கட்சி எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு திட்டமிட்டு, இதற்காக ஆதரவு திரட்டி வந்தனர். எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி எம்.பி.க்களும் தெரசா மேவை வீழ்த்த தகுந்த தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் சமர்ப்பித்த செயல்திட்ட அறிக்கைக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார். சுமார் 5 மணிநேர விவாதத்துக்கு பின்னர் இந்த இறுதி முடிவு எட்டப்பட்டதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் எனது அறிவுப்பூர்வமாகவும், மனப்பூர்வமாகவும் சிந்தித்து ஒட்டுமொத்த பிரிட்டன் நாட்டுக்கும் நன்மை பயக்கும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் மந்திரிகள் அனைவரும் கையொப்பமிட்ட பின்னர் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் உடன்படிக்கை என்ற பெயரில் ஐரோப்பிய யூனியனுக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் இந்த உடன்படிக்கையின் அம்சங்கள் ஐரோப்பிய யூனியன் நாட்டு அரசுகளின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.