Tamilசெய்திகள்

தமிழக கவர்னரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 முதல் 5 மாதங்கள் உள்ள நிலையில் தற்போதே தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது.

முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தற்போதே தொடங்கிவிட்டன. இதனால், முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக இடையே கடுமையான வார்த்தைமோதல் ஏற்பட்டுள்ளது. திமுகவும் அதிமுகவும் மாறிமாறி ஊழல் குற்றச்சாட்டுகளை ஒருவர் மீது ஒருவர் முன்வைத்து வருகின்றன.

திமுக மீது 2ஜி வழக்கை சுட்டிக்காட்டி அதிமுக ஊழல்குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. அதேபோல் அதிமுக மீது துறை ரீதியாக டெண்டர் முறைகளில் ஊழல் நடைபெறுவதாக திமுக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசு மீது வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று சந்திக்க உள்ளார்.

இன்று காலை 10 மணியளவில் ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள இந்த சந்திப்பில் தமிழக அரசு மீது வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆளுநர் புரோகித்திடம் திமுக தலைவர் முக ஸ்டாலின் மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.