Tamilவிளையாட்டு

ராகுல் டிராவிட்டை உடனடியாக ஆஸ்திரேலியா அனுப்ப வேண்டும் – திலிப் வெங்சர்க்கார் கோரிக்கை

அடிலெய்டு டெஸ்டில் இந்தியா 36 ரன்னில் சுருண்டது, ஹசில்வுட் 5 விக்கெட்டும், பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டும் சாய்த்தனர். விராட் கோலி அடுத்த மூன்று போட்டிகளில் விளையாடவில்லை. முகமது ஷமியும் காயத்தால் விலகியுள்ளார்.

விராட் கோலி இல்லாமல் இருக்கும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு உதவுவதற்காக இந்திய கிரிக்கெட் அகாடமியின் ஆலோசகராக இருக்கும் ராகுல் டிராவிட்டை உடனடியாக ஆஸ்திரேலியா அனுப்ப வேண்டும் என பிசிசிஐ-க்கு முன்னாள் வீரர் திலிப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார்.

‘‘அணியின் உதவிக்காக ராகுல் டிராவிட்டை உடனடியாக ஆஸ்திரேலியா அனுப்ப வேண்டும். ஆஸ்திரேலியா கண்டிசனில் மூவ் ஆகும் பந்தை எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து வழிகாட்ட அவரை விட சிறந்தவர் யாருமில்லை. அவருடைய வருகை இந்திய அணிக்கு நெட் பயிற்சியில் மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும். கிரிக்கெட் அகாடமி கொரோனா தொற்றால் 9 மாதங்களாக மூடிதான் கிடக்கிறது. அவரை அனுப்பி வைக்கலாம்.

விராட் கோலி இல்லாத நிலையில், பிசிசிஐ அவரை அணிக்கு சிறந்த வகையில் உதவும் வகையில் பயன்படுத்திக் கொள்ள முடியும். 14 நாட்கள் கோரன்டைனில் இருந்தாலும், 3-வது டெஸ்ட் போட்டிக்கு முன் அவரால் இந்திய அணிக்கு வலைப்பயிற்சியில் ஆலோசனை வழங்க முடியும். ஜனவரி 7-ல்தான் சிட்னி டெஸ்ட் தொடங்குகிறது’’ என்றார்.