Tamilசெய்திகள்

தமிழக அரசியல் கட்சி பிரமுகர்களிடம் தலைமை தேர்தல் அதிகாரிகள் இன்று ஆலோசனை

தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டசபைக்கு பொதுத் தேர்தலை நடத்த தேர்தல் கமி‌ஷன் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 4 மாத காலமே உள்ளதால் தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவதா? அல்லது 2 கட்டமாக நடத்துவதா? என்பது குறித்தும் தேர்தல் ஆணையம் முடிவு செய்ய உள்ளது.

இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணைய பொதுச் செயலாளர் உமேஷ் சின்கா தலைமையிலான உயர்மட்ட குழு இன்று தமிழகம் வருகிறது.

துணை தேர்தல் கமி‌ஷனர்கள் சுதீப்ஜெயின், ஆசிஸ்குந்த்ரா, பீகார் தலைமை தேர்தல் அதிகாரி எச்.ஆர்.சீனிவாசா, தேர்தல் ஆணைய இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவத்சவா, தேர்தல் கமி‌ஷன் செயலாளர் மலையாய் மாலிக் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் அனைவரும் இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார்கள். அவர்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விமான நிலையம் சென்று வரவேற்கிறார்.

பின்னர் இந்த குழுவினர் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா ஓட்டலுக்கு செல்கிறார்கள். அங்கு பகல் 12 மணியளவில் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனை நடத்துகிறார்கள்.

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் தேர்தலை ஒரே கட்டமாக நடத்தலாமா? அல்லது 2 கட்டமாக நடத்தலாமா? என்பது பற்றி ஒவ்வொரு கட்சி பிரதிநிதிகளிடமும் தனித்தனியாக கருத்து கேட்கிறார்கள். அப்போது ஒவ்வொரு கட்சி பிரதிநிதிகளும் கொடுக்கும் மனுக்களையும் பெற்றுக் கொள்கிறார்கள்.

அதன்பிறகு தேர்தல் ஆணைய அதிகாரிகள் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளைச் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்கள். வருமான வரித்துறை அதிகாரிகளுட னும் ஆலோசனை நடைபெறுகிறது.