Tamilசெய்திகள்

சென்னையில் 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் – மருமகள் கைது

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் தலில் சந்த் (வயது 74). சென்னை சவுகார்பேட்டையில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். வால்டாக்ஸ் சாலை விநாயகர் மேஸ்திரி தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி புஷ்பா பாய் (70), மகன் ஷீத்தல் (38) ஆகியோருடன் வசித்துவந்தார். இவருடைய மகள் பிங்கி (35) திருமணமாகி பேசின்பிரிட்ஜ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசிக்கிறார். நேற்று முன்தினம் மாலை தலில் சந்த், புஷ்பா பாய், ஷீத்தல் ஆகியோர் துப்பாக்கி குண்டு பாய்ந்தநிலையில் ரத்தவெள்ளத்தில் படுக்கை அறையில் பிணமாக கிடந்தனர்.

பரபரப்பு மிகுந்த பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தலில் சந்த் நிதிநிறுவனம் நடத்தி வந்ததால், கொள்ளை முயற்சியால் இந்த கொலைகள் நடந்ததா? அல்லது சொத்து தகராறு, முன்விரோதம் போன்ற காரணங்களால் நடந்ததா? என்று யானைக்கவுனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். குற்றவாளிகளை பிடிப்பதற்கு 5 தனிப்படை போலீசார் களத்தில் இறக்கப்பட்டனர்.

அப்பகுதியில் பொறுத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும், மகள் பிங்கி மற்றும் குடியிருப்புவாசிகளிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த வழக்கில் உடனடியாக துப்பு துலங்க தொடங்கியது. குடும்ப பிரச்சினையில் ஷீத்தலின் மனைவி ஜெயமாலா தனது சகோதரர்கள் கைலாஷ், விகாஷ் உள்ளிட்டோருடன் இணைந்து, இந்த கொடூர கொலைகளை செய்திருக்கலாம் என்பது தெரியவந்தது.

தலில் சந்த், புஷ்பா பாய், ஷீத்தல் 3 பேரும் உயிரிழந்ததும் எந்தவித பதற்றமும் இல்லாமல் ஜெயமாலாவும், அவருடைய உறவினர்கள், சகோதரர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

அவர்கள் முககவசம் அணிந்திருந்ததாலும், நடை, உடை, பாவனைகளை வைத்து வீட்டில் இருந்து வெளியே சென்றது ஜெயமாலாதான் என்பதை தலில் சந்தின் மகள் பிங்கி உறுதிப்படுத்தினார். அதன்பேரில் போலீசார் அவர்கள் சென்ற வழி முழுவதும் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்க ஜெயமாலா குடும்பத்தினர் காரில் ஒரு குழுவாகவும், ரெயிலில் ஒரு குழுவாகவும் பிரிந்து சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீசார் விமானம் மூலம் புனே சென்றனர்.

இந்நிலையில் தலில் சந்த், புஷ்பா பாய், ஷீத்தல் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த மருமகள் ஜெயமாலா உள்பட 3 பேரை புனேவில் சென்னை போலீசார் கைது செய்தனர்.

அவர்களை சென்னைக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.