ஐபிஎல் இறுதிப் போட்டி – இன்று மும்பை, டெல்லி மோதல்
8 அணிகள் இடையிலான 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ந் தேதி தொடங்கியது. அபுதாபி, துபாய், சார்ஜா ஆகிய நகரங்களில் அரங்கேறிய லீக் ஆட்டங்கள் முடிவில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் முறையே 5 முதல் 8-வது இடங்களை பிடித்து வெளியேறின.
துபாயில் கடந்த 5-ந் தேதி நடந்த முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தி 6-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அபுதாபியில் 6-ந் தேதி நடந்த வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை வீழ்த்தி வெளியேற்றி 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. அபுதாபியில் நேற்று முன்தினம் இரவு நடந்த 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 17 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்சை சாய்த்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது.
ஐ.பி.எல். மகுடத்தை வெல்லப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி துபாயில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு அரங்கேறுகிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்-ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மல்லுகட்டுகின்றன.
4 முறை (2013, 2015, 2017, 2019) கோப்பையை வென்று ஆதிக்கம் செலுத்தி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி 2010-ம் ஆண்டில் மட்டுமே இறுதிப்போட்டியில் தோல்வியை (சென்னையிடம்) சந்தித்தது. மற்றபடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற எல்லா தடவையும் வெற்றி வாகை சூடி அசத்தி இருக்கிறது.
இந்த சீசனில் 9 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்ததுடன் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மும்பையின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவானதாக விளங்குகிறது. பேட்டிங்கில் குயின்டான் டி காக் (4 அரைசதத்துடன் 483 ரன்கள்), இஷான் கிஷன் (4 அரைசதத்துடன் 483 ரன்கள்), சூர்யகுமார் யாதவ் (4 அரைசதத்துடன் 461 ரன்கள்), பொல்லார்ட் (259 ரன்கள்), ஹர்திக் பாண்ட்யா (278 ரன்கள்) நல்ல பார்மில் உள்ளனர். காயம் சர்ச்சைக்கு மத்தியில் களம் திரும்பிய ரோகித் சர்மா (264 ரன்கள்) கடைசி 3 ஆட்டங்களில் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்தார். இதனால் அவர் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். மும்பை அணியினர் இதுவரை 130 சிக்சர்கள் விளாசி இருக்கின்றனர். இதுவே அந்த அணியின் அதிரடிக்கு சான்றாகும். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா (27 விக்கெட்), டிரென்ட் பவுல்ட் (22 விக்கெட்), ராகுல் சாஹர் (15 விக்கெட்) ஆகியோர் அசத்தி வருகிறார்கள்.
8 வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை பிடித்த டெல்லி அணி தொடரின் தொடக்கத்தில் வீறு நடைபோட்டது. ஆனால் தற்போது சற்று தடுமாறுகிறது. முதலாவது தகுதி சுற்று உள்பட கடைசி 6 ஆட்டங்களில் 5-ல் தோல்வியை சந்தித்த அந்த அணி 2-வது தகுதி சுற்றில் ஐதராபாத்துக்கு ஆப்பு வைத்து இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. அந்த அணியின் பேட்டிங்கில் ஷிகர் தவான் முதுகெலும்பாக விளங்கி வருகிறார். அவர் இதுவரை 2 சதம், 4 அரைசதம் உள்பட 603 ரன்கள் குவித்து இருக்கிறார். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (454 ரன்கள்), மார்கஸ் ஸ்டோனிஸ் (352 ரன்கள்) ஆகியோரும் பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர். மோசமான பார்ம் காரணமாக கடந்த ஆட்டத்தில் பிரித்வி ஷா கழற்றி விடப்பட்டார். அவருக்கு இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான். ரஹானே, ரிஷாப் பண்ட் நிலைத்து நின்று ஆடினால் அந்த அணியின் பேட்டிங் மேலும் வலுப்பெறும். பந்து வீச்சில் காஜிசோ ரபடா (29 விக்கெட்), நோர்டியா (20 விக்கெட்), ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் (12 விக்கெட்), ஆர்.அஸ்வின் (13 விக்கெட்), அக்ஷர் பட்டேல் (9 விக்கெட்) ஆகியோர் வலுசேர்த்து வருகிறார்கள். ஐதராபாத் அணிக்கு எதிரான தகுதி சுற்றில் பழைய பார்முக்கு திரும்பி பெற்ற வெற்றி டெல்லி அணிக்கு புதிய நம்பிக்கையை அளித்து இருக்கும்.
நடப்பு தொடரில் 2 லீக் ஆட்டங்களிலும் முறையே 5 விக்கெட் மற்றும் 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை பந்தாடிய மும்பை அணி முதலாவது தகுதி சுற்றிலும் 57 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த அணிக்கு எதிராக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் மும்பை அணியே இறுதிப்போட்டியிலும் கோலோச்ச அதிக வாய்ப்பு இருக்கிறது. மும்பைக்கு எதிரான 3 ஆட்டங்களிலும் தோல்வி கண்டு இருக்கும் டெல்லி அணி அதற்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
அதிக முறை கோப்பையை வென்று இருக்கும் மும்பை அணி 5-வது முறையாக மகுடம் சூடி தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுமா? அல்லது முதல்முறையாக கோப்பையை வென்று நீண்ட நாள் தாகத்தை தீர்த்து டெல்லி அணி சரித்திரம் படைக் குமா? என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.
இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
மும்பை: குயின்டான் டி காக், ரோகித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், பொல்லார்ட், குருணல் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யா, நாதன் கவுல்டர் நிலே, டிரென்ட் பவுல்ட், ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா.
டெல்லி: மார்கஸ் ஸ்டோனிஸ், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ஹெட்மயர், ரிஷாப் பண்ட், ரஹானே, பிரவின் துபே, அக்ஷர் பட்டேல், ஆர்.அஸ்வின், காஜிசோ ரபடா, நோர்டியா.
இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.