சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்துள்ளனர். தற்போது கொரோனா தொற்று பரவுவதால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றை பக்தர்கள் பின்பற்ற வேண்டும் என கேரள அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில் மண்டல பூஜைக்காக வருகிற 15-ந் தேதி அன்று சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. இதனையொட்டி பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து கேரள சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையையொட்டி தினமும் 1,000 பக்தர்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம், சானிட்டைசர் கொண்டு வர வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முன்பதிவு செய்த பக்தர்கள் சபரிமலைக்கு வருவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னதாக எடுத்த “கொரோனா இல்லை“ என்ற சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
இந்த சான்றிதழை நிலக்கல்லில் உள்ள முகாமில் சமர்ப்பித்தபின்பு தான் சபரிமலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, குணமடைந்த பக்தர்கள் சபரிமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
24 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட பரிசோதனை சான்றிதழ் முக்கியம் என்ற அறிவிப்பு வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களுக்கும் பொருந்தும் என கேரள அரசு தெரிவித்து உள்ளதால் அவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.