பாகிஸ்தான் கேப்டனை புகழும் சவுரவ் கங்குலி!
தற்போது நடைபெற்று வரும் 14 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் இந்தியாவிடம் இரண்டு முறை தோல்வியை சந்தித்துள்ளது. மேலும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் போராடி வெற்றிப் பெற்ற அந்த அணியின் பேட்ஸ் மேன்களும், பவுலர்களும் சரியான முறையில் விளையாடததால், அவர்கள் மீது பாகிஸ்தான் ரசிகர்கள் பெரும் கோபத்தில் உள்ளனர்.
பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமதுக்கு எதிராக, பாகிஸ்தான் முன்னணி வீரர்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸை புகழ்ந்துள்ளார்.
இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய கங்குலி, “சர்பிராஸ் அகமது ஒரு சிறந்த கேப்டன், அவரை போன்ற வீரர்கள் தினம் தினம் பிறந்து வர மாட்டார்கள். கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை அப்பழுக்கற்ற முறையில் சிறப்பாக வழி நடத்தி கோப்பையை வென்ற அவர் ஒரு தைரியமான வீரர்.
ஆசிய கோப்பை தோல்விகளால் அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்களை எல்லாம் புறம்தள்ளிவிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், முன்னாள் வீரர்களும் சேர்ந்து அவரை ஆதரித்து ஊக்கப்படுத்த வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.