Tamilசினிமா

விஜயின் தந்தை கொடுத்த புகார் – தயாரிப்பாளருக்கு 3 மாதம் சிறை தண்டனை

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தொடர்ந்த செக் மோசடி வழக்கில் ‘அழகிய தமிழ் மகன்’ திரைப்பட தயாரிப்பாளர் அப்பச்சனுக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் ‘அழகிய தமிழ் மகன்’. இப்படத்தில் விஜய், ஸ்ரேயா, சந்தானம், நமீதா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தை ஸ்வர்க்க சித்ரா தயாரிப்பு நிறுவன உரிமையாளர் அப்பச்சன் தயாரித்திருந்தார்.

இந்தப் படத்தின் வெளியீட்டுக்காக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் 15 நாளில் திருப்பி தருவதாக கூறி அப்பச்சன், ஒரு கோடி ரூபாய் கடனாக பெற்றிருந்தார்.

இந்தப் பணத்தை திருப்பி கொடுக்கும் வகையில், அப்பச்சன் கொடுத்த செக் வங்கி கணக்கில் பணமில்லாமல் இரண்டு முறை திரும்பி வந்ததாக குற்றம் சாட்டி, எஸ்.ஏ.சந்திரசேகர், அப்பச்சன் மீது கடந்த 2008-ம் ஆண்டு சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்வர்க்க சித்ரா தயாரிப்பு நிறுவன உரிமையாளர் அப்பச்சனுக்கு 3 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் ஒரு கோடி ரூபாயை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.