Tamilசெய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவில் இலவச தரிசனத்திற்கு வழங்கப்படும் டோக்கன் அதிகரிக்க முடிவு

கொரோனா தொற்று காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் இலவச தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் முதல் பக்தர்கள் இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்காக ஒரு நாளைக்கு 3 ஆயிரம் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று இலவச டோக்கன் பெறுவதற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. டோக்கன் வழங்கியபோது அதை பெறுவதற்கு வரிசையில் நின்ற பக்தர்கள் முண்டியடித்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பலர் டோக்கன் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கோவில் கூடுதல் அதிகாரி தர்மாரெட்டி அங்கு சென்று பார்வையிட்டு பக்தர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில் தற்போது ஒரு நாளைக்கு 3 ஆயிரம் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதலாக 2 ஆயிரம் டோக்கன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கூட்டத்தை தவிர்க்கும் வகையில் இலவச தரிசன டோக்கன்களை ஆன்லைனில் வழங்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும் சித்தூர் மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் இலவச தரிசனத்தை ரத்து செய்யலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.